Thursday, December 06, 2007

Star13. ஒரு நண்பனின் கதை இது!

எனது மற்ற நட்சத்திர வாரப் பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

எனது, 15 ஆண்டுகள் நண்பனான சிவராமனைப் பற்றி எழுத வேண்டும் என்று ஏதோ ஒரு உந்துதல்!

சிவராமன் என் தம்பிக்குத் தான் முதலில் நண்பனானன். 1991 என்று ஞாபகம், அவனை என் தம்பி வீட்டுக்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்தினான். குடும்பச்சூழல் காரணமாக (சிவராமனுக்கு அப்பா கிடையாது) பன்னிராண்டவது வகுப்பு முடிந்தவுடனேயே அம்பத்தூரில் ஏதோ ஒரு கெமிக்கல் கம்பெனியில் வேலைக்குப் போனவன். என்னைச் சந்தித்த வந்தபோது அவனுக்கு வயது 21.

சிவராமன் தினமும் காலையில் சீக்கிரம் வேலைக்குப் போக வேண்டியிருந்ததால், ஒரு ஸ்கூட்டர் வாங்குவதற்கு என் தம்பி வங்கியில் கடன் ஏற்பாடு செய்து விட்டு, அதற்கு கியாரண்டி கையெழுத்து வேண்டி தான் என்னிடம் அழைத்து வந்தான். சாதாரணமாக தெரிந்தவர்களுக்கே, யோசித்துத் தான், நான் கியாரண்டி கையெழுத்து போட உடன்படுபவன். என்னமோ சிவராமனை பார்த்தவுடன் பிடித்துப் போய், கடன் பத்திரத்தில் உடனே கியாரண்டி கையெழுத்து போட்டுக் கொடுத்து விட்டேன்!

சிவராமன் பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரில் வலம் வர ஆரம்பித்தான். அவன் பாசமாகப் பழகுவான், உதவி என்றால் ஓடி வந்து செய்து கொடுப்பான். என்ன, கொஞ்சம் பிடிவாதக்காரன், அதனால் தன் தவறை லேசில் ஒப்புக் கொள்ள மாட்டான். ஆனால், நண்பர்கள் நாங்கள் அதை பெரிதுபடுத்த மாட்டோம்.

சிவராமன் கடின உழைப்பாளி. கெமிக்கல் தொழில் குறித்து சீக்கிரமே நல்ல புரிதல் பெற்று விட்டான். தனது 6 வருட வேலையை தைரியமாக உதறிவிட்டு, தன் அனுபவத்தின் மேல் நம்பிக்கையோடு, சிறிய அளவில் பிஸினஸ் ஆரம்பித்தான். அம்பத்தூரில் ஒரு கொடவுன் தான் அவன் கம்பெனி. ஆரம்பத்தில், அவனே முதலாளி, கெமிக்கல் தயாரிக்கும் / சப்ளை செய்யும் தொழிலாளி, மார்க்கெட்டிங் நிர்வாகி ஆகிய எல்லா வேடங்களையும் ஏற்று கடினமாக உழைத்தான்.

ஒரு 5 வருடங்களில், அம்பத்தூரில் சொந்தமாக வாங்கிய இடத்தில் கொடவுன்/ஆபிஸ் அமைத்தான். அவனிடம் 8 பேர் வேலை பார்த்தனர். அதோடு, கம்பெனிக்கென 2 பைக், சப்ளைக்கு ஒரு மாருதி வேன் என்று சிவராமனின் பிஸினஸில் நல்ல முன்னேற்றம். கையிலும் நிறைய பணம் புரள ஆரம்பித்தது. நண்பர்களிடம் பண விஷயத்தில் தாராளமாக இருப்பான், நிறைய பேருக்கு உதவியும் செய்து இருக்கிறான்.

சிவராமனின் பிடிவாதம் மெல்ல மெல்ல கர்வமாக மாறிய காலமது! எங்கள் நண்பர்கள் வட்டத்தில் நேரம் செலவிடுவதை குறைத்துக் கொண்டு, வேறு சில கூடா நட்புகளைச் சேர்த்துக் கொண்டான். எப்போதாவது குடித்தவன், அடிக்கடி குடிக்க ஆரம்பித்தான். மாதத்துக்கு 2 முறை நடுபழனியில் உள்ள கோயிலுக்குச் செல்வான். 'என்னடா அங்க' என்று கேட்டால், யாரோ சித்தரைப் பார்க்கப் போகிறேன் என்பான். பிசினஸில் நன்றாகப் போய்க் கொண்டிருந்தாலும், அவனுக்குத் தெரியாமல் பலரால் ஏமாற்றப்பட்டான்! அவன் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை! ஆனாலும், வாழ்க்கையை ஒரு ராஜா மாதிரி அனுபவித்தான், பார்க்கவும் ராஜா மாதிரி தான் இருப்பான்!

எப்போது, எங்கிருந்து கஞ்சா புகைக்கும் பழக்கம் அவனைத் தொற்றிக் கொண்டது என்பது எங்கள் நண்பர்கள் யாருக்கும் தெரியாது. 'ஏண்டா இப்படி?' என்றால், 'எப்பயாவது தான்'என்று சமாளிப்பான். அந்த காலகட்டத்தில், அவனுக்கு ஒரு பொறியியற் கல்லூரி மாணவியுடன் காதல் ஏற்பட்டது. இவனது பழக்கங்கள் தெரிந்தே அந்தப் பெண் இவனைக் காதலித்தது, என்ன எழவு காதலோ?

சிவராமன் குடித்து விட்டு வண்டி ஓட்டி, அடிக்கடி ஏதாவது விபத்தில் சிக்கிக் கொண்டு எங்களில் யாருக்காவது ·போன் வரும். இரவு/பகல் என்று ·போன் எப்பொழுது வேண்டுமானாலும் வரும்! போய் மீட்டுக் கொண்டு வருவோம், வேற வழி!? விபத்து என்பது அவனுக்கு சர்வ சாதாரணமான விஷயம். இருமுறை, பெரிய விபத்திலிருந்து உயிர் தப்பியும், நாங்கள் சொல்வதைக் கேட்கமாட்டான். அனாவசியச் செலவுகளில் ஏராளமாக பணம் போயிற்று. எங்கள் ஏரியாவை காலி செய்து கொண்டு, அண்ணாநகர் பக்கம் வீடு பார்த்துக் கொண்டு போய் விட்டான். எங்களுக்கும் அவனுக்கும் இடையே போக்குவரத்து குறைந்து போனது.

காதலித்த பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொண்டு கொஞ்ச நாள் நல்லபடி இருந்தான். ஒரு பெண் குழந்தை பிறந்தது. மீண்டும் மெல்ல பழைய (குடி/கஞ்சா) பழக்கங்கள் பக்கம் திரும்பினான். பிசினஸ் நொடிக்க ஆரம்பித்தது. வீட்டில் ஓயாத சண்டை. அந்தப்பெண் குழந்தையை தூக்கிக் கொண்டு, தன் அம்மா வீட்டுக்குப் போய் விட்டது. ஒரு கட்டத்தில், கடன்காரர்கள் நெருக்க ஆரம்பிக்கவே, இன்சால்வன்ஸி கொடுத்து, பிசினஸை இழுத்து மூட வேண்டியதாயிற்று.

அவனது குடும்பமே அவனை கைவிட்டது! எங்கள் ஏரியாவில் ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து, ஏதோ ஒரு சின்ன கம்பெனியில் வேலைக்குப் போய் வந்தான். ஆனால், அவனது கெட்ட பழக்கங்களை விட முடியவில்லை, நண்பர்கள் நாங்கள் இரண்டு,மூன்று முறை சிகிச்சைக்குக் கூட்டிச் சென்றோம். கொஞ்ச நாள் மருந்து சாப்பிட்டு ஒழுங்காக இருப்பான், மீண்டும் பழைய பல்லவி! எங்களுக்கும் குடும்பம் / வேலை என்றிருக்க, அவனுக்காக எவ்வளவு நேரம் ஒதுக்க முடியும் ?

ஒரு கட்டத்தில், எங்கள் வீடுகளுக்கு வருவதை நிறுத்திக் கொண்டான். எப்போதாவது சாலையில் பார்த்தால், சின்ன விசாரிப்பு, அத்தோடு சரி. போதைப் பழக்கத்தாலும், மனைவி/குழந்தையைப் பிரிந்த மனவேதனையாலும், ஆளே உருக்குலைந்து போய் காணப்பட்டான். இந்தச் சூழலில் தான், இன்னொரு நண்பன் ஒரு நாள், ஓர் அதிர்ச்சித் தகவலோடு வீட்டுக்கு வந்தான்.

ஒரு பெண்ணின் சங்கிலியை அறுத்து, சிவராமன் போலீசாரால் கைது செய்யப்பட்டு, அப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக அந்த நண்பன் கூறியதைக் கேட்டு பயங்கர அதிர்ச்சி ஏற்பட்டது! அந்த செய்தி பேப்பரிலும் வந்திருந்ததைக் காட்டினான். நிச்சயம் சிவராமன் திருடியிருக்க மாட்டான் என்று நான் நம்பினேன். நண்பர்கள் நாங்கள் ஒரு வக்கீலைப் பார்த்து, பெயிலில் அவனை வெளிக் கொண்டு வர 15 நாட்கள் ஆயிற்று.

என் தம்பி கூட்டி வர, தயங்கியபடி என்னைப் பார்க்க வந்தான். 'என்ன தான் நடந்தது?' என்று கேட்டேன். அன்று போதை மயக்கத்தில் சிவராமன் சாலையில் நடந்து சென்றபோது, யாரோ ஒருவன் முன்னால் சென்று கொண்டிருந்த பெண்ணின் செயினை அறுத்து ஓடி வர, அந்தப் பெண் அலற, அந்தத் திருடன் செயினை சிவராமன் அருகே போட்டு விட்டு ஓடி விட்டான். கொஞ்சம் கூட்டமும் கூடி விட்டிருந்தது. செயினை குனிந்து எடுத்த சிவராமனை திருடன் என்று முடிவு கட்டி போலீசிடம் ஒப்படைத்து விட்டனர். போதையின் வசம் இருந்ததால், இவன் பேச்சு எடுபடவில்லை.

புழல் சிறைக்கு அனுப்பப்படுவதற்கு முன்னால், இரண்டு நாள் லாக்கப்பில் நிறைய அடிபட்டதாகவும், அதனால் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் அவன் கூறியபோது, என் கண்கள் கலங்கி விட்டன. ராஜாவைப் போல் வாழ்ந்தவனுக்கு திருட்டுப் பட்டம்! லாட்ஜ் ரூமை காலி செய்து விட்டு அவனது தங்கை வீட்டில் கொஞ்ச நாள் இருக்குமாறு கூறியதை ஏற்றுக் கொண்டான். ரூம் வாடகையை செட்டில் பண்ணக் கூட கையில் பணமில்லை என்றபோது, மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. தேவையான பணத்தைக் கொடுத்தேன்.

பெயிலில் வெளிவந்ததால், தினமும் காவல் நிலையத்தில் சிவராமன் கையெழுத்து போட வேண்டியிருந்தது. இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை என்னையும், என் தம்பியையும் பார்க்க வருவான். தன் வாழ்க்கை சீரழிந்து போனதைச் சொல்லி கொஞ்சம் புலம்புவான். திருடியதாக பேப்பரில் செய்தியோடு புகைப்படமும் வெளி வந்ததால், தனக்கு இங்கே மறுபடி எந்த வேலையும் கிடைக்காது என்பான், தன் அண்ணன் இருக்கும் தில்லிக்குப் போய் வேலை தேடப் போகிறேன் என்பான், இரவில் தூக்கமே வருவதில்லை என்பான். பார்க்க பரிதாபமாய் இருக்கும். 'கொஞ்சம் பொறு, ஏதாவது செய்யலாம்' என்று ஆறுதல் கூறுவோம்.

வெளியில் வந்து, 4 வாரங்கள் கஞ்சா/குடி பக்கம் போகாமல் தான் இருந்தான். ஆனால், தங்கை வீட்டில் இருப்பு கொள்ளாமல், மற்றொரு நண்பரின் உதவியோடு, மீண்டும் ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்க ஆரம்பித்தது, எனக்குத் தெரியாது. வேலையில் கொஞ்சம் பிஸியாக இருந்து விட்டேன். ஆனால், சிவராமனை மனநல மருத்துவரிடம் ஒரு முறை அழைத்துச் செல்ல வேண்டுமென்று என்று என் தம்பியிடம் ஒரு முறை சொன்னேன்.

சிவராமன் மீண்டும் லாட்ஜுக்கு சென்ற ஐந்தாவது நாள் (ஒரு ஆறு வாரங்களுக்கு முன்) அவன் தூக்கு போட்டுக் கொண்டு செத்துப் போய் விட்டதாக தகவல் வந்தது! ராயப்பேட்டை மருத்துவமனையில் அறுத்து கொடுக்கப்பட்ட, ஊதிப்போன அவனது உடலை மயிலாப்பூர் இடுகாட்டில் தீக்கிரையாக்கியபோது, என் மனதில் வேதனையை விட ஒரு வித அமைதியைத் தான் உணர்ந்தேன். அவன் மனைவி அவன் சாவுக்குக் கூட வரவில்லை! சிவராமன் தன் சஞ்சலத்திலிருந்தும், துயரத்திலிருந்தும் விடுதலை அடைந்து விட்டதாகத் தான் எனக்குத் தோன்றியது! ஆனால், அவனை மருத்துவரிடம் சற்று முன்னதாகவே கூட்டிச் செல்லாமல் விட்டு விட்டோமே என்ற குற்ற உணர்வு மட்டும் என்னை உறுத்திக் கொண்டு தான் இருக்கிறது :(

சிவராமனை மாமா ஸ்தானத்தில் வைத்து என் மூத்த மகளை அவன் மடியில் அமர்த்தி, அவளுக்கு முதல் மொட்டை போட்டதும், ஒரு முறை என் குடும்பத்தோடு கொடைக்கானல் சென்றபோது, சிவராமனும் கூட வந்து எங்களோடு செலவிட்ட சந்தோஷமான நாட்களும், ஏதோ இப்போது தான் நடந்தது போல் இருக்கிறது!

என்றென்றும் அன்புடன்
பாலா

பி.கு: பதிவில் நண்பனின் பெயர் மாற்றப்பட்டுள்ளது!


எனது மற்ற நட்சத்திர வாரப் பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

8 மறுமொழிகள்:

said...

After reading this I feel sad. You write so well. Excellent post.

Sevi

said...

whew! You had seen a full cycle of an adult's life - from take off to crash! Dont know what to say beyond this, but only pity him.
..ram

dondu(#11168674346665545885) said...

சிலரை losers என்று கூறுவார்கள். உங்கள் நண்பனும் அப்படித்தான் இருந்திருக்கிறான். இப்பதிவு முதலில் படித்திருக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

enRenRum-anbudan.BALA said...

Selvi, Ram,

Thanks !

Dondu Sir,
//
சிலரை losers என்று கூறுவார்கள். உங்கள் நண்பனும் அப்படித்தான் இருந்திருக்கிறான். இப்பதிவு முதலில் படித்திருக்கிறேன்.
//
He was such a kind hearted and friendly person !

I don't understand how you could have read this posting earlier than NOW !

-----E.A. Bala

said...

:((((

Mangai said...

படித்ததும் மனத்தை பாதித்தது. உங்கள் வாழ்க்கை பிரிச்னைக்கு நடுவிலும் நண்பன் தவறான வழியில் போய்விட்டான் என்பது தெரிந்தும் முடிந்த போதெல்லாம் உதவி செய்த அந்த குணம் ஆச்சரியம் அளிக்கிறது. குற்ற உணர்வு தேவையில்லை.

http://www.mangaiival.blogspot.com/

enRenRum-anbudan.BALA said...

மங்கை,
நன்றி.

said...

மனதை பாதித்தது :((

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails